search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்கள் மீட்பு"

    • கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.
    • கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் அங்குள்ள அண்ணாமலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும் சாதுக்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பக்தர்கள் உணவு பணம் கொடுக்கின்றனர்.

    இதனை பயன்படுத்திக்கொண்டு கும்பல் ஒன்று பக்தர்களிடம் சிறுவர்களை வைத்து பிச்சை எடுத்து நூதன முறையில் பணம் பறித்து வருகின்றனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து கைக்குழந்தையுடன் வந்து பெண்கள் பிச்சை எடுக்கும் அவல நிலையும் நீடித்து வருகிறது.

    இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சமூகநலத்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பு உள்ளிட்டவைகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கிரிவல பக்தர்களிடம் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் கை குழந்தைகளை வைத்தபடி பெண்களும் மற்றும் சிறுவர்களும் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.

    இதனை கண்ட அதிகாரிகள் கிரிவலப் பாதையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், மோரணம், கொண்டம், கோசாலை உள்பட பல ஊர்களைச் சேர்ந்த 9 சிறுவர்கள் மற்றும் 5 சிறுமிகளை மீட்டனர்.

    இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த சிறுவர், சிறுமிகளை பொம்மை விற்பனை செய்யலாம் என அழைத்து வந்து பிச்சை எடுக்க ஈடுபடுத்தி உள்ளனர்.

    அதிகாரிகள் சிறுவர்களை பிடிப்பதைக் கண்ட கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    கிரிவலப் பாதையில் மீட்கப்பட்டுள்ள 14 சிறுவர் சிறுமிகளும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களை அழைத்து வந்தவர்கள் குறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளியில் படிக்கக்கூடிய இந்த குழந்தைகளை பிச்சை எடுக்க அழைத்து வந்தவர்களிடம் குழந்தை நல குழுமம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல திருவண்ணாமலையில் சாதுக்கள் மற்றும் சாமியார்கள் என்ற போர்வையில் பக்தர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்தன.

    இதனை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலைக்கு புதியதாக வந்துள்ள சாதுக்கள் சாமியார்களின் கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.

    • சுற்றுலா பயணிகள், தொழில் சார்ந்த வணிக பிரதிநிதிகள் நாள்தோறும் சென்னைக்கு வருகின்றனர்.
    • ரெயில்வே போலீசாருடன் இணைந்து மாநகராட்சி காப்பகங்களில் ஆதரவற்றவர்களை தங்க வைக்கிறோம்.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

    சுற்றுலா பயணிகள், தொழில் சார்ந்த வணிக பிரதிநிதிகள் நாள்தோறும் சென்னைக்கு வருகின்றனர். அப்படி வரும்போது சென்ட்ரல் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுப்பவர்களின் செயல் அறுவருக்கத்தக்கதாக உள்ளது.

    50-க்கும் மேற்பட்ட முதியோர்கள், பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள், ஊனமுற்றோர் உணவுக்காக பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். சிலர் பிள்ளைகளால், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள்.

    இவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டீட் விஷன் என்ற தொண்டு நிறுவன அமைப்புடன் இணைந்து ரெயில்வே போக்குவரத்து போலீசார் பிச்சை எடுப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா, சூப்பிரண்டு பொன்ராமு ஆகியோர் முயற்சியால் 31 பேர் மீட்கப்பட்டு அவர்கள் தங்கும் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு மாற்றுதிறனாளி, 8 பெண்கள் உள்பட 31 பேர் பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து ஸ்டீட் விஷன் தொண்டு நிறுவனர் சீதாதேவி கூறியதாவது:-

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தை தொடர்ந்து எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் யாசகம் கேட்கும் ஆதரவற்றவர்களை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    ரெயில்வே போலீசாருடன் இணைந்து மாநகராட்சி காப்பகங்களில் ஆதரவற்றவர்களை தங்க வைக்கிறோம். அவர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்கப்படும். வேலை செய்ய விருப்பம் இருந்தால் வெளியில் போய் விட்டு திரும்பி இல்லத்திற்கு வந்து விடவேண்டும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திராவில் இருந்து ரெயிலில் சிறுவர்களை கடத்தி செல்வதாக வாரங்கல் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சிறுவர்களை பெற்றோர் அனுமதியுடன் வேலைக்கு அழைத்து சென்றார்களா அல்லது கடத்தப்பட்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் இருந்து ரெயிலில் சிறுவர்களை கடத்தி செல்வதாக வாரங்கல் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    வாராங்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் குழந்தைகள் நல குழுவினர் அந்த வழியாக வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது 7 பெட்டிகளில் தனித்தனியாக சிறுவர்களை கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ரெயில் பெட்டிகளில் இருந்த 42 சிறுவர்களை மீட்டனர்.

    இது தொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறுவர்களை வேலைக்காக மும்பை, செகந்திராபாத்திற்கு அழைத்து செல்வதாக தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட சிறுவர்களில் 13 பேரின் முகவரி கண்டு பிடிக்கப்பட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    மீதமுள்ளவர்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

    விரைவில் காப்பகத்தில் உள்ள சிறுவர்கள் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என குழந்தைகள் நல அலுவலர்கள் தெரிவித்தனர்.

    சிறுவர்களை பெற்றோர் அனுமதியுடன் வேலைக்கு அழைத்து சென்றார்களா அல்லது கடத்தப்பட்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோயம்பேடு பஸ் நிலையத்தில் 3 சிறுவர்கள் அழுதுகொண்டே சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார் 3 பேரையும் ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் சிறுவர்கள் 3 பேர் அழுதுகொண்டே சுற்றி திரிவதாக பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் திருச்சி செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது நண்பர்களான 3 பேரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததால் 3 பேரும் வீட்டை விட்டு வெளியேறி அரசு பஸ் மூலம் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார் 3 பேரையும் ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

    • 8 வயது முதல் 10 வயது வரை உள்ள 12 சிறுவர்கள் குச்சி மற்றும் கைகளால் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    • பீகாரில் உள்ள சிறுவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

    கொளத்தூர்:

    மாதவரம் பொன்னியம்மன்மேடு, அய்யர் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பள்ளி இயங்கி வந்தது. இங்கு தங்கி படிக்கும் சிறுவர்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் அவர்கள் அழுதபடி சத்தம் போடுவதாகவும் அப்பகுதி மக்கள் கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜாராமுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து உதவி கமிஷ்னர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் காளிராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு 8 வயது முதல் 10 வயது வரை உள்ள 12 சிறுவர்கள் குச்சி மற்றும் கைகளால் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் காயம் அடைந்த சிறுவர்களை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் பராமரிப்பாளர் அக்தர் மற்றும் ஆசிரியர் அப்துல்லா ஆகிய இருவரை கைது செய்தனர்.

    இதற்கிடையே பள்ளியில் இருந்து 12 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ராயபுரத்தில் உள்ள சிறுவர்கள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதுபற்றி பீகாரில் உள்ள சிறுவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் வந்ததும் பெற்றோரிடம் சிறுவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். மேலும் வீட்டில் செயல்பட்ட பள்ளி மூடப்பட்டு வீட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ஓசூர் பகுதியில் ரெயிலில் பேனா விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
    • சிறுவர்களை மீட்டு விசாரணை செய்ததில், அவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் ஓசூர் பகுதியில் ரெயிலில் பேனா விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தை சேர்ந்து அதிகாரிகள், சிறுவர்களை மீட்டு விசாரணை செய்ததில், அவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் 3 சிறுவர்களையும் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரிகள் அந்த 3 சிறுவர்களையும் வேலகவுண்டன்பட்டி அருகே இளநகரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களை குழந்தைகள் காப்பக இல்ல நிர்வாகி விஜயகுமார் பராமரித்து வந்தார்.

    இந்நிலையில் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த அந்த 3 சிறுவர்களும், கடந்த மாதம் 30-ந் தேதி மாலை குழந்தைகள் இல்லத்தில் இருந்து காணாமல் போய்விட்டனர். விஜயகுமார் அவர்களை பல்வேறு பகுதிகளிலும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று காணாமல் போன 3 சிறுவர்களையும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அந்த 3 சிறுவர்களும் சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருப்பதாக தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று அவர்களை மீட்டு வேலகவுண்டன்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் குழந்தைகள் காப்பக நிர்வாகி விஜயகுமாரிடம் அவர்களை போலீசார் ஒப்படைத்தனர்.

    • பொலவகாளி பாளையம் பகுதியில் அனுமதியின்றி குழந்தைகள் இல்லம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது.
    • காப்பகத்தில் இருந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆண்கள் குழந்தைகள் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் பகுதிகளில் அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்தப்படுவதாக ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து சோதனை செய்தனர்.

    அப்போது பொலவகாளி பாளையம் பகுதியில் அனுமதியின்றி குழந்தைகள் இல்லம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து தொடர்ந்து அந்த குழந்தைகள் காப்பகத்தில் அதிகாரிகள் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் கோபி செட்டிபாளையம் போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த குழந்தைகள் காப்பகம் கடந்த 4 மாதமாக அனுமதியின்றி செயல்பட்டதும். அங்கு 18 வயதுக்குட்ட 11 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த காப்பகத்தில் இருந்த 11 சிறுவர்கள் மீட்கப்பட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆண்கள் குழந்தைகள் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து அந்த காப்பகத்தின் நிர்வாகி குருமூர்த்தி என்பவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரை மீட்கும் பணியில், 4 சிறுவர்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் நான்கு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளார். #ThaiCaveRescue
    பாங்காக்:

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 

    திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு  கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர். 



    முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது.  மீட்ப்புப்பணியில் சிறப்பான முன்னேற்றமாக 13 பேரில் 4 மாணவர்கள் நேற்று மீட்கப்பட்டனர். 

    இந்நிலையில், இன்று மேலும் 4 பேர் மீட்கப்பட்டுளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் முதலுதவி அளிக்கப்பட்ட பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள 5 பேரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும் மீட்புக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். 
    ×